சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
8.105.06   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருச்சதகம் - VI அநுபோக சுத்தி (51-60)
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvasagam2/05.06 Thirusadhagam.mp3
8.118   மாணிக்க வாசகர்    திருவாசகம்   குயிற்பத்து - கீத மினிய குயிலே
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvaasagam/18 Kuilpatthu Thiruvasagam.mp3
Audio: https://sivaya.org/audio/8.118. குயிற்பத்து.mp3
8.121   மாணிக்க வாசகர்    திருவாசகம்   கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvaasagam/21 Koilmutha Thirupathigam Thiruvasagam.mp3
8.132   மாணிக்க வாசகர்    திருவாசகம்   பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/32 Prarthanaipatthu Thiruvasagam.mp3
8.133   மாணிக்க வாசகர்    திருவாசகம்   குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக்
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/33 Kulaithapatthu Thiruvasagam.mp3
Audio: https://sivaya.org/thiruvasagam2/33 Kuzhaitha pathu.mp3
8.143   மாணிக்க வாசகர்    திருவாசகம்   திருவார்த்தை - மாதிவர் பாகன்
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/43 Thiruvarthai Thiruvasagam.mp3
Audio: https://sivaya.org/thiruvasagam2/43 Thiruvaarthai.mp3
8.144   மாணிக்க வாசகர்    திருவாசகம்   எண்ணப்பதிகம் - பாருருவாய
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/44 Ennapathigam Thiruvasagam.mp3
8.145   மாணிக்க வாசகர்    திருவாசகம்   யாத்திரைப் பத்து - பூவார் சென்னி
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (கோயில் (சிதம்பரம்) )
Audio: https://sivaya.org/thiruvaasagam/45 Yathiraipathu Thiruvasagam.mp3
8.150   மாணிக்க வாசகர்    திருவாசகம்   ஆனந்தமாலை - மின்னே ரனைய
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
Audio: https://sivaya.org/thiruvaasagam/50 Aanandamaalai Thiruvasagam.mp3
Audio: https://sivaya.org/thiruvasagam2/50 Aanandha maalai.mp3
ஈசனே! என் எம்மானே! எந்தை பெருமான்! என் பிறவி
நாசனே! நான் யாதும் ஒன்று அல்லாப் பொல்லா நாய் ஆன
நீசனேனை ஆண்டாய்க்கு, நினைக்கமாட்டேன் கண்டாயே:
தேசனே! அம்பலவனே! செய்வது ஒன்றும் அறியேனே.

[51]
செய்வது அறியாச் சிறு நாயேன், செம் பொன் பாத மலர் காணாப்
பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன்; பொய் இலா
மெய்யர் வெறி ஆர் மலர்ப் பாதம் மேவக் கண்டும், கேட்டிருந்தும்,
பொய்யனேன் நான் உண்டு, உடுத்து, இங்கு இருப்பது ஆனேன்: போர் ஏறே!

[52]
போர் ஏறே! நின் பொன் நகர்வாய் நீ போந்தருளி, இருள் நீக்கி,
வார் ஏறு இள மென் முலையாளோடு உடன் வந்தருள, அருள் பெற்ற
சீர் ஏறு அடியார் நின் பாதம் சேரக் கண்டும், கண் கெட்ட
ஊர் ஏறு ஆய், இங்கு உழல்வேனோ? கொடியேன் உயிர் தான் உலவாதே!

[53]
உலவாக் காலம் தவம் எய்தி, உறுப்பும் வெறுத்து, இங்கு உனைக் காண்பான்,
பல மா முனிவர் நனி வாட, பாவியேனைப் பணி கொண்டாய்;
மல மாக் குரம்பை இது மாய்க்க மாட்டேன்; மணியே, உனைக் காண்பான்,
அலவாநிற்கும் அன்பு இலேன்; என் கொண்டு எழுகேன், எம்மானே?

[54]
மான் நேர் நோக்கி உமையாள் பங்கா! வந்து இங்கு ஆட்கொண்ட
தேனே! அமுதே! கரும்பின் தெளிவே! சிவனே! தென் தில்லைக்
கோனே! உன் தன் திருக்குறிப்புக் கூடுவார் நின் கழல் கூட,
ஊன் ஆர் புழுக்கூடு இது காத்து, இங்கு இருப்பது ஆனேன்; உடையானே!

[55]
உடையானே! நின் தனை உள்கி, உள்ளம் உருகும், பெரும் காதல்
உடையார், உடையாய்! நின் பாதம் சேரக் கண்டு, இங்கு ஊர் நாயின்
கடை ஆனேன், நெஞ்சு உருகாதேன், கல்லா மனத்தேன், கசியாதேன்,
முடை ஆர் புழுக் கூடு இது காத்து, இங்கு இருப்பது ஆக முடித்தாயே.

[56]
முடித்த ஆறும், என் தனக்கே தக்கதே; முன், அடியாரைப்
பிடித்த ஆறும், சோராமல் சோரனேன் இங்கு, ஒருத்தி வாய்
துடித்த ஆறும், துகில் இறையே சோர்ந்த ஆறும், முகம் குறு வேர்
பொடித்த ஆறும், இவை உணர்ந்து, கேடு என் தனக்கே சூழ்ந்தேனே.

[57]
தேனை, பாலை, கன்னலின் தெளியை, ஒளியை, தெளிந்தார் தம்
ஊனை உருக்கும் உடையானை, உம்பரானை, வம்பனேன்,
நான் நின் அடியேன்; நீ என்னை ஆண்டாய்,' என்றால், அடியேற்குத்
தானும் சிரித்தே, அருளலாம் தன்மை ஆம், என் தன்மையே.

[58]
தன்மை பிறரால் அறியாத தலைவா! பொல்லா நாய் ஆன
புன்மையேனை ஆண்டு, ஐயா! புறமே போக விடுவாயோ?
என்னை நோக்குவார் யாரே? என் நான் செய்கேன்? எம்பெருமான்!
பொன்னே திகழும் திருமேனி எந்தாய்! எங்குப் புகுவேனே?

[59]
புகுவேன், எனதே நின் பாதம்; போற்றும் அடியார் உள் நின்று
நகுவேன், பண்டு தோள் நோக்கி நாணம் இல்லா நாயினேன்.
நெகும் அன்பு இல்லை, நினைக் காண; நீ ஆண்டு அருள, அடியேனும்
தகுவனே? என் தன்மையே! எந்தாய், அந்தோ! தரியேனே!

[60]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.118   குயிற்பத்து - கீத மினிய குயிலே  
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அறுசீர் விருத்தம்
கீதம் இனிய குயிலே! கேட்டியேல், எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவின், பாதாளம் ஏழினுக்கு அப்பால்;
சோதி மணி முடி சொல்லின், சொல் இறந்து நின்ற தொன்மை
ஆதி குணம் ஒன்றும் இல்லான்; அந்தம் இலான்; வரக் கூவாய்!

[1]
ஏர் தரும் ஏழ் உலகு ஏத்த, எவ் உருவும் தன் உரு ஆய்,
ஆர்கலி சூழ் தென் இலங்கை, அழகு அமர் வண்டோதரிக்கு,
பேர் அருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிரானை;
சீரிய வாயால், குயிலே! தென் பாண்டி நாடனை; கூவாய்!

[2]
நீல உருவின் குயிலே! நீள் மணி மாடம் நிலாவும்
கோல அழகின் திகழும் கொடி மங்கை உள்ளுறை கோயில்,
சீலம் பெரிதும் இனிய திரு உத்தரகோசமங்கை,
ஞாலம் விளங்க இருந்த நாயகனை, வரக் கூவாய்!

[3]
தேன் பழச் சோலை பயிலும் சிறு குயிலே! இது கேள் நீ,
வான் பழித்து, இம் மண் புகுந்து, மனிதரை ஆட்கொண்ட வள்ளல்;
ஊன் பழித்து, உள்ளம் புகுந்து, என் உணர்வு அது ஆய ஒருத்தன்;
மான் பழித்து ஆண்ட மென் நோக்கி மணாளனை; நீ வரக் கூவாய்!

[4]
சுந்தரத்து இன்பக் குயிலே! சூழ் சுடர் ஞாயிறு போல,
அந்தரத்தே நின்று இழிந்து, இங்கு, அடியவர் ஆசை அறுப்பான்;
முந்தும், நடுவும், முடிவும், ஆகிய மூவர் அறியாச்
சிந்துரச் சேவடியானை; சேவகனை; வரக் கூவாய்!

[5]
இன்பம் தருவன்; குயிலே! ஏழ் உலகும் முழுது ஆளி;
அன்பன்; அமுது அளித்து ஊறும் ஆனந்தன்; வான் வந்த தேவன்;
நன் பொன் மணிச் சுவடு ஒத்த நல் பரிமேல் வருவானை;
கொம்பின் மிழற்றும் குயிலே! கோகழி நாதனை; கூவாய்!

[6]
உன்னை உகப்பன்; குயிலே! உன் துணைத் தோழியும் ஆவன்,
பொன்னை அழித்த நல் மேனிப் புகழின் திகழும் அழகன்,
மன்னன், பரிமிசை வந்த வள்ளல், பெருந்துறை மேய
தென்னவன், சேரலன், சோழன், சீர்ப் புயங்கன், வரக் கூவாய்!

[7]
வா, இங்கே, நீ, குயில் பிள்ளாய்! மாலொடு நான்முகன் தேடி,
ஓவி, அவர் உன்னிநிற்ப, ஒண் தழல் விண் பிளந்து ஓங்கி,
மேவி, அன்று, அண்டம் கடந்து, விரி சுடர் ஆய், நின்ற மெய்யன்;
தாவி வரும் பரிப் பாகன்; தாழ் சடையோன்; வரக் கூவாய்!

[8]
கார் உடைப் பொன் திகழ் மேனி, கடி பொழில் வாழும், குயிலே!
சீர் உடைச் செம் கமலத்தில் திகழ் உரு ஆகிய செல்வன்;
பாரிடைப் பாதங்கள் காட்டி, பாசம் அறுத்து, எனை ஆண்ட
ஆர் உடை அம் பொனின் மேனி அமுதினை; நீ, வரக் கூவாய்!

[9]
கொந்து அணவும் பொழில் சோலைக் கூம் குயிலே! இது கேள் நீ;
அந்தணன் ஆகி வந்து, இங்கே, அழகிய சேவடி காட்டி,
எம் தமர் ஆம் இவன்' என்று இங்கு என்னையும் ஆட்கொண்டருளும்,
செம் தழல் போல் திருமேனித் தேவர் பிரான், வரக் கூவாய்!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.121   கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்  
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அறுசீர் விருத்தம்
உடையாள், உன் தன் நடுவு, இருக்கும்; உடையாள் நடுவுள், நீ இருத்தி;
அடியேன் நடுவுள், இருவீரும் இருப்பதானால், அடியேன், உன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் பொன்னம்பலத்து எம்
முடியா முதலே! என் கருத்து முடியும்வண்ணம், முன் நின்றே!

[1]
முன் நின்று ஆண்டாய், எனை முன்னம்; யானும், அதுவே முயல்வு உற்று,
பின் நின்று, ஏவல் செய்கின்றேன்; பிற்பட்டு ஒழிந்தேன்; பெம்மானே!
என்?' என்று, அருள் இவர நின்று, போந்திடு' என்னாவிடில், அடியார்,
உன் நின்று, இவன் ஆர்' என்னாரோ? பொன்னம்பலக் கூத்து உகந்தானே!

[2]
உகந்தானே! அன்பு உடை அடிமைக்கு; உருகா உள்ளத்து உணர்வு இலியேன்,
சகம் தான் அறிய முறையிட்டால், தக்க ஆறு அன்று' என்னாரோ?
மகம் தான் செய்து வழி வந்தார் வாழ, வாழ்ந்தாய்; அடியேற்கு உன்
முகம் தான் தாராவிடின், முடிவேன்; பொன்னம்பலத்து எம் முழு முதலே!

[3]
முழு முதலே! ஐம் புலனுக்கும், மூவர்க்கும், என் தனக்கும்,
வழி முதலே! நின் பழ அடியார் திரள், வான், குழுமிக்
கெழு முதலே! அருள் தந்து இருக்க இரங்கும் கொல்லோ?' என்று
அழும் அதுவே அன்றி, மற்று என் செய்கேன்? பொன்னம்பலத்து அரைசே!

[4]
அரைசே! பொன்னம்பலத்து ஆடும் அமுதே!' என்று உன் அருள் நோக்கி,
இரை தேர் கொக்கு ஒத்து, இரவு பகல், ஏசற்று இருந்தே, வேசற்றேன்;
கரை சேர் அடியார் களி சிறப்ப, காட்சி கொடுத்து, உன் அடியேன்பால்,
பிரை சேர் பாலின் நெய் போல, பேசாது இருந்தால், ஏசாரோ?

[5]
ஏசா நிற்பர், என்னை; உனக்கு அடியான் என்று, பிறர் எல்லாம்
பேசா நிற்பர்; யான் தானும் பேணா நிற்பேன், நின் அருளே;
தேசா! நேசர் சூழ்ந்து இருக்கும் திருவோலக்கம் சேவிக்க,
ஈசா! பொன்னம்பலத்து ஆடும் எந்தாய்! இனித்தான் இரங்காயே!

[6]
இரங்கும் நமக்கு அம்பலக் கூத்தன்' என்று என்று, ஏமாந்திருப்பேனை,
அரும் கற்பனை கற்பித்து, ஆண்டாய்; ஆள்வார் இலி மாடு ஆவேனோ?
நெருங்கும் அடியார்களும், நீயும், நின்று, நிலாவி, விளையாடும்
மருங்கே சார்ந்து, வர, எங்கள் வாழ்வே, வா' என்று அருளாயே!

[7]
அருளாது ஒழிந்தால், அடியேனை, அஞ்சேல்' என்பார் ஆர், இங்கு?
பொருளா, என்னைப் புகுந்து, ஆண்ட பொன்னே! பொன்னம்பலக் கூத்தா!
மருள் ஆர் மனத்தோடு, உனைப் பிரிந்து, வருந்துவேனை, வா' என்று, உன்
தெருள் ஆர் கூட்டம் காட்டாயேல், செத்தே போனால், சிரியாரோ?

[8]
சிரிப்பார்; களிப்பார்; தேனிப்பார்; திரண்டு, திரண்டு, உன் திருவார்த்தை
விரிப்பார்; கேட்பார்; மெச்சுவார்; வெவ்வேறு இருந்து, உன் திருநாமம்
தரிப்பார்; பொன்னம்பலத்து ஆடும் தலைவா' என்பார்; அவர் முன்னே
நரிப்பு ஆய், நாயேன் இருப்பேனோ? நம்பி! இனித்தான் நல்காயே!

[9]
நல்காது ஒழியான் நமக்கு' என்று, உன் நாமாம் பிதற்றி, நயன நீர்
மல்கா, வாழ்த்தா, வாய் குழறா, வணங்கா, மனத்தால் நினைந்து உருகி,
பல்கால் உன்னைப் பாவித்து, பரவி, பொன்னம்பலம்' என்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி, அருளாய்! என்னை உடையானே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.132   பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி  
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அறுசீர் விருத்தம்
கலந்து, நின் அடியாரோடு, அன்று, வாளா, களித்திருந்தேன்;
புலர்ந்து போன, காலங்கள்; புகுந்து நின்றது இடர், பின் நாள்;
உலர்ந்து போனேன்; உடையானே! உலவா இன்பச் சுடர் காண்பான்,
அலந்து போனேன்; அருள் செய்யாய், ஆர்வம் கூர, அடியேற்கே!

[1]
அடியார் சிலர், உன் அருள் பெற்றார், ஆர்வம் கூர; யான் அவமே,
முடை ஆர் பிணத்தின், முடிவு இன்றி, முனிவால், அடியேன், மூக்கின்றேன்;
கடியேனுடைய கடு வினையைக் களைந்து, உன் கருணைக் கடல் பொங்க,
உடையாய்! அடியேன் உள்ளத்தே ஓவாது உருக, அருளாயே!

[2]
அருள் ஆர் அமுதப் பெரும் கடல்வாய், அடியார் எல்லாம் புக்கு அழுந்த,
இருள் ஆர் ஆக்கை இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய்; எம்மானே!
மருள் ஆர் மனத்து ஓர் உன்மத்தன் வருமால்' என்று, இங்கு, எனைக் கண்டார்
வெருளாவண்ணம், மெய் அன்பை, உடையாய்! பெற நான் வேண்டுமே!

[3]
வேண்டும், வேண்டும், மெய் அடியார் உள்ளே, விரும்பி, எனை அருளால்
ஆண்டாய்; அடியேன் இடர் களைந்த அமுதே! அரு மா மணி முத்தே!
தூண்டா விளக்கின் சுடர் அனையாய்! தொண்டனேற்கும் உண்டாம்கொல்
வேண்டாது ஒன்றும் வேண்டாது, மிக்க அன்பே மேவுதலே?

[4]
மேவும் உன் தன் அடியாருள் விரும்பி, யானும், மெய்ம்மையே,
காவி சேரும் கயல் கண்ணாள் பங்கா, உன் தன் கருணையினால்
பாவியேற்கும் உண்டாமோ பரம ஆனந்தப் பழம் கடல் சேர்ந்து,
ஆவி, யாக்கை, யான், எனது, என்று யாதும் இன்றி, அறுதலே?

[5]
அறவே பெற்றார், நின் அன்பர் அந்தம் இன்றி, அகம் நெகவும்;
புறமே கிடந்து, புலை நாயேன் புலம்புகின்றேன்; உடையானே!
பெறவே வேண்டும், மெய் அன்பு; பேரா, ஒழியா, பிரிவு இல்லா,
மறவா, நினையா, அளவு இலா, மாளா, இன்ப மா கடலே!

[6]
கடலே அனைய ஆனந்தம் கண்டார் எல்லாம் கவர்ந்து உண்ண,
இடரே பெருக்கி, ஏசற்று, இங்கு, இருத்தல் அழகோ, அடி நாயேன்?
உடையாய்! நீயே அருளுதி என்று, உணர்த்தாது ஒழிந்தே, கழிந்தொழிந்தேன்;
சுடர் ஆர் அருளால், இருள் நீங்க, சோதீ! இனித்தான் துணியாயே!

[7]
துணியா, உருகா, அருள் பெருகத் தோன்றும் தொண்டர் இடைப் புகுந்து,
திணி ஆர் மூங்கில் சிந்தையேன், சிவனே! நின்று தேய்கின்றேன்;
அணி ஆர் அடியார் உனக்கு உள்ள அன்பும் தாராய்; அருள் அளியத்
தணியாது, ஒல்லை வந்தருளி, தளிர் பொன் பாதம் தாராயே!

[8]
தாரா அருள் ஒன்று இன்றியே தந்தாய்' என்று, உன் தமர் எல்லாம்
ஆரா நின்றார்; அடியேனும், அயலார் போல, அயர்வேனோ?
சீர் ஆர் அருளால், சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா!
பேர் ஆனந்தம் பேராமை வைக்கவேண்டும், பெருமானே!

[9]
மான் ஓர் பங்கா! வந்திப்பார் மதுரக் கனியே! மனம் நெகா
நான், ஓர் தோளாச் சுரை ஒத்தால், நம்பி! இனித்தான் வாழ்ந்தாயே?
ஊனே புகுந்த உனை உணர்ந்தே, உருகிப் பெருகும் உள்ளத்தை,
கோனே! அருளும் காலம் தான், கொடியேற்கு, என்றோ கூடுவதே?

[10]
கூடிக் கூடி, உன் அடியார் குனிப்பார், சிரிப்பார், களிப்பாராய்;
வாடி வாடி, வழி அற்றே, வற்றல் மரம் போல் நிற்பேனோ?
ஊடி ஊடி, உடையாயொடு கலந்து, உள் உருகி, பெருகி, நெக்கு,
ஆடி ஆடி, ஆனந்தம் அதுவே ஆக, அருள் கலந்தே!

[11]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.133   குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக்  
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அறுசீர் விருத்தம்
குழைத்தால், பண்டைக் கொடு வினை, நோய், காவாய்; உடையாய்! கொடு வினையேன்
உழைத்தால், உறுதி உண்டோ தான்? உமையாள் கணவா! எனை ஆள்வாய்;
பிழைத்தால், பொறுக்க வேண்டாவோ? பிறை சேர் சடையாய்! முறையோ?' என்று
அழைத்தால், அருளாது ஒழிவதே, அம்மானே, உன் அடியேற்கே?

[1]
அடியேன் அல்லல் எல்லாம், முன், அகல ஆண்டாய், என்று இருந்தேன்;
கொடி ஏர் இடையாள் கூறா, எம் கோவே, ஆ! ஆ!' என்று அருளி,
செடி சேர் உடலைச் சிதையாதது எத்துக்கு? எங்கள் சிவலோகா!
உடையாய்! கூவிப் பணி கொள்ளாது, ஒறுத்தால், ஒன்றும் போதுமே?

[2]
ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின் கருணை,
இன்றே, இன்றிப் போய்த்தோ தான்? ஏழை பங்கா! எம் கோவே!
குன்றே அனைய குற்றங்கள் குணம் ஆம் என்றே, நீ கொண்டால்,
என் தான் கெட்டது? இரங்கிடாய்; எண் தோள், முக் கண், எம்மானே!

[3]
மான் நேர் நோக்கி மணவாளா! மன்னே! நின் சீர் மறப்பித்து, இவ்
ஊனே புக, என் தனை நூக்கி, உழலப் பண்ணுவித்திட்டாய்;
ஆனால், அடியேன் அறியாமை அறிந்து, நீயே அருள் செய்து,
கோனே! கூவிக்கொள்ளும் நாள் என்று? என்று, உன்னைக் கூறுவதே?

[4]
கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ!
தேறும் வகை நீ! திகைப்பு நீ! தீமை, நன்மை, முழுதும் நீ!
வேறு ஓர் பரிசு, இங்கு, ஒன்று இல்லை; மெய்ம்மை, உன்னை விரித்து உரைக்கின்,
தேறும் வகை என்? சிவலோகா! திகைத்தால், தேற்ற வேண்டாவோ?

[5]
வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட, முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன், மாற்கு, அரியோய் நீ! வேண்டி, என்னைப் பணி கொண்டாய்;
வேண்டி, நீ யாது அருள் செய்தாய், யானும், அதுவே வேண்டின் அல்லால்,
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு அன்றே?

[6]
அன்றே, என் தன் ஆவியும், உடலும், உடைமை எல்லாமும்,
குன்றே அனையாய்! என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ?
இன்று, ஓர் இடையூறு எனக்கு உண்டோ? எண் தோள், முக் கண், எம்மானே!
நன்றே செய்வாய்; பிழை செய்வாய்; நானோ இதற்கு நாயகமே?

[7]
நாயின் கடை ஆம் நாயேனை நயந்து, நீயே ஆட்கொண்டாய்;
மாயப் பிறவி உன் வசமே வைத்திட்டு இருக்கும் அது அன்றி,
ஆயக் கடவேன், நானோ தான்? என்னதோ, இங்கு, அதிகாரம்?
காயத்து இடுவாய்; உன்னுடைய கழல் கீழ் வைப்பாய்; கண் நுதலே!

[8]
கண் ஆர் நுதலோய்! கழல் இணைகள் கண்டேன், கண்கள் களி கூர;
எண்ணாது, இரவும் பகலும், நான், அவையே எண்ணும்இது அல்லால்
மண்மேல் யாக்கை விடும் ஆறும், வந்து, உன் கழற்கே புகும் ஆறும்
அண்ணா! எண்ணக் கடவேனோ? அடிமை சால அழகு உடைத்தே!

[9]
அழகே புரிந்திட்டு, அடி நாயேன் அரற்றுகின்றேன்; உடையானே!
திகழா நின்ற திருமேனி காட்டி, என்னைப் பணிகொண்டாய்;
புகழே பெரிய பதம் எனக்கு, புராண! நீ, தந்தருளாதே,
குழகா, கோல மறையோனே, கோனே, என்னைக் குழைத்தாயே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.143   திருவார்த்தை - மாதிவர் பாகன்  
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அறுசீர் விருத்தம்
மாது இவர் பாகன், மறை பயின்ற வாசகன், மா மலர் மேய சோதி,
கோது இல் பரம் கருணை, அடியார் குலாவும் நீதி குணம் ஆய நல்கும்,
போது அலர் சோலைப் பெருந்துறை, எம் புண்ணியன், மண்ணிடை வந்திழிந்து,
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார் எம்பிரான் ஆவாரே.

[1]
மால், அயன், வானவர் கோனும், வந்து வணங்க, அவர்க்கு அருள்செய்த ஈசன்,
ஞாலம் அதனிடை வந்திழிந்து, நல் நெறி காட்டி, நலம் திகழும்
கோல மணி அணி மாடம் ணீடு குலாவும் இடவை மட நல்லாட்கு,
சீலம் மிகக் கருணை அளிக்கும் திறம் அறிவார் எம்பிரான் ஆவாரே.

[2]
அணி முடி ஆதி அமரர் கோமான், ஆனந்தக் கூத்தன், அறு சமயம்
பணி வகை செய்து, படவு அது ஏறி, பாரொடு விண்ணும் பரவி ஏத்த,
பிணி கெட, நல்கும் பெருந்துறை எம் பேர் அருளாளன், பெண்பால் உகந்து,
மணி வலை கொண்டு, வான் மீன் விசிறும் வகை அறிவார் எம்பிரான் ஆவாரே.

[3]
வேடு உரு ஆகி, மயேந்திரத்து மிகு குறை வானவர் வந்து, தன்னைத்
தேட இருந்த சிவபெருமான், சிந்தனை செய்து, அடியோங்கள் உய்ய,
ஆடல் அமர்ந்த பரிமா ஏறி, ஐயன், பெருந்துறை ஆதி, அந் நாள்
ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட இயல்பு அறிவார் எம்பிரான் ஆவாரே.

[4]
வந்து, இமையோர்கள் வணங்கி ஏத்த, மாக் கருணைக் கடல் ஆய், அடியார்
பந்தனை விண்டு அற நல்கும், எங்கள் பரமன், பெருந்துறை ஆதி, அந் நாள்
உந்து திரைக் கடலைக் கடந்து, அன்று, ஓங்கு மதில் இலங்கை அதனில்,
பந்து அணை மெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே.

[5]
வேவ, திரிபுரம், செற்ற வில்லி, வேடுவன் ஆய், கடி நாய்கள் சூழ,
ஏவல் செயல் செய்யும் தேவர் முன்னே எம்பெருமான் தான், இயங்கு காட்டில்
ஏ உண்ட பன்றிக்கு இரங்கி, ஈசன், எந்தை, பெருந்துறை ஆதி, அன்று
கேவலம் கேழல் ஆய், பால் கொடுத்த கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே.

[6]
நாதம் உடையது ஒர் நல் கமலப் போதினில் நண்ணிய நல் நுதலார்,
ஓதி, பணிந்து, அலர் தூவி, ஏத்த, ஒளி வளர் சோதி, எம் ஈசன்; மன்னும்,
போது அலர் சோலை, பெருந்துறை எம் புண்ணியன்; மண்ணிடை வந்து தோன்றி,
பேதம் கெடுத்து, அருள் செய் பெருமை அறியவல்லார் எம்பிரான் ஆவாரே.

[7]
பூ அலர் கொன்றை அம் மாலை மார்பன், போர் உகிர் வன் புலி கொன்ற வீரன்,
மாது நல்லாள், உமை மங்கை, பங்கன், வண் பொழில் சூழ் தென் பெருந்துறைக் கோன்,
ஏது இல் பெரும் புகழ் எங்கள் ஈசன், இரும் கடல் வாணற்குத் தீயில் தோன்றும்
ஓவிய மங்கையர் தோள் புணரும் உருவு அறிவார் எம்பிரான் ஆவாரே.

[8]
தூ வெள்ளை நீறு அணி எம்பெருமான், சோதி மயேந்திர நாதன், வந்து
தேவர் தொழும் பதம் வைத்த ஈசன், தென்னன், பெருந்துறை ஆளி, அன்று
காதல் பெருக, கருணை காட்டி, தன் கழல் காட்டி, கசிந்து உருக,
கேதம் கெடுத்து, என்னை ஆண்டருளும் கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே.

[9]
அம் கணன், எங்கள் அமரர் பெம்மான், அடியார்க்கு அமுதன், அவனி வந்த
எங்கள் பிரான், இரும் பாசம் தீர இக பரம் ஆயது ஒர் இன்பம் எய்த,
சங்கம் கவர்ந்து, வண் சாத்தினோடும், சதுரன், பெருந்துறை ஆளி, அன்று,
மங்கையர் மல்கு மதுரை சேர்ந்த வகை அறிவார் எம்பிரான் ஆவாரே.

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.144   எண்ணப்பதிகம் - பாருருவாய  
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அறுசீர் விருத்தம்
பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும்; பத்திமையும் பெற வேண்டும்;
சீர் உரு ஆய சிவபெருமானே, செம் கமல மலர் போல
ஆர் உரு ஆய என் ஆர் அமுதே, உன் அடியவர் தொகை நடுவே,
ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி, என்னையும் உய்யக்கொண்டருளே.

[1]
உரியேன் அல்லேன் உனக்கு அடிமை; உன்னைப் பிரிந்து, இங்கு ஒரு பொழுதும்
தரியேன், நாயேன்; இன்னது என்று அறியேன்; சங்கரா! கருணையினால்
பெரியோன் ஒருவன், கண்டு கொள்' என்று, உன் பெய் கழல் அடி காட்டி,
பிரியேன்' என்று என்று, அருளிய அருளும் பொய்யோ? எங்கள் பெருமானே!

[2]
என்பே உருக, நின் அருள் அளித்து, உன் இணை மலர் அடி காட்டி,
முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவா, முனிவர், முழு முதலே,
இன்பே அருளி, எனை உருக்கி, உயிர் உண்கின்ற எம்மானே,
நன்பே அருளாய் என் உயிர் நாதா! நின் அருள் நாணாமே.

[3]
பத்து இலன் ஏனும், பணிந்திலன் ஏனும், உன் உயர்ந்த பைம் கழல் காணப்
பித்து இலன் ஏனும், பிதற்றிலன் ஏனும், பிறப்பு அறுப்பாய்; எம்பெருமானே!
முத்து அனையானே! மணி அனையானே! முதல்வனே! முறையோ?' என்று
எத்தனையானும் யான் தொடர்ந்து, உன்னை இனிப் பிரிந்து ஆற்றேனே.

[4]
காணும் அது ஒழிந்தேன் நின் திருப் பாதம்; கண்டு கண் களி கூர,
பேணும் அது ஒழிந்தேன்; பிதற்றும் அது ஒழிந்தேன்; பின்னை, எம்பெருமானே,
தாணுவே, அழிந்தேன்: நின் நினைந்து உருகும் தன்மை, என் புன்மைகளால்
காணும் அது ஒழிந்தேன்; நீ இனி வரினும், காணவும் நாணுவனே.

[5]
பால் திரு நீற்று எம் பரமனை; பரம் கருணையொடும் எதிர்ந்து
தோற்றி, மெய் அடியார்க்கு அருள் துறை அளிக்கும் சோதியை; நீதி இலேன்,
போற்றி, என் அமுதே, என நினைந்து, ஏத்தி, புகழ்ந்து, அழைத்து, அலறி, என் உள்ளே
ஆற்றுவன் ஆக; உடையவனே, எனை, ஆவ' என்று அருளாயே!

[6]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.145   யாத்திரைப் பத்து - பூவார் சென்னி  
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அறுசீர் விருத்தம்
பூ ஆர் சென்னி மன்னன், எம் புயங்கப் பெருமான், சிறியோமை
ஓவாது உள்ளம் கலந்து, உணர்வு ஆய் உருக்கும் வெள்ளக் கருணையினால்,
ஆ! ஆ!' என்னப் பட்டு, அன்பு ஆய் ஆட்பட்டீர், வந்து ஒருப்படுமின்;
போவோம்; காலம் வந்தது காண்; பொய் விட்டு, உடையான் கழல் புகவே.

[1]
புகவே வேண்டாம் புலன்களில் நீர்; புயங்கப் பெருமான் பூம் கழல்கள்
மிகவே நினைமின்; மிக்க எல்லாம் வேண்டா; போக விடுமின்கள்;
நகவே, ஞாலத்து உள் புகுந்து, நாயே அனைய நமை ஆண்ட,
தகவே உடையான் தனைச் சாரத் தளராது இருப்பார் தாம் தாமே.

[2]
தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதி வகையும்;
யாம் ஆர்? எமது ஆர்? பாசம் ஆர்? என்ன மாயம்? இவை போக,
கோமான் பண்டைத் தொண்டரொடும், அவன் தன் குறிப்பே குறிக்கொண்டு,
போம் ஆறு அமைமின் பொய் நீக்கி, புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே.

[3]
அடியார் ஆனீர் எல்லீரும், அகலவிடுமின் விளையாட்டை;
கடி சேர் அடியே வந்து அடைந்து, கடைக்கொண்டு இருமின் திருக் குறிப்பை;
செடி சேர் உடலைச் செல நீக்கி, சிவலோகத்தே நமை வைப்பான்
பொடி சேர் மேனிப் புயங்கன் தன், பூ ஆர் கழற்கே புகவிடுமே.

[4]
விடுமின் வெகுளி, வேட்கை நோய்; மிகவே, காலம் இனி இல்லை;
உடையான் அடிக்கீழ், பெரும் சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படுமின்;
அடைவோம், நாம் போய்ச் சிவபுரத்துள், அணி ஆர் கதவு அது அடையாமே;
புடைபட்டு உருகிப் போற்றுவோம், புயங்கன் ஆள்வான் புகழ்களையே.

[5]
புகழ்மின்; தொழுமின்; பூப் புனைமின்; புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு,
இகழ்மின் எல்லா அல்லலையும்; இனி, ஓர் இடையூறு அடையாமே,
திகழும் சீர் ஆர் சிவபுரத்துச் சென்று, சிவன் தாள் வணங்கி, நாம்
நிகழும் அடியார் முன் சென்று, நெஞ்சம் உருகி, நிற்போமே.

[6]
நிற்பார் நிற்க; நில்லா உலகில் நில்லோம்; இனி, நாம் செல்வோமே,
பொற்பால் ஒப்பாம் திருமேனிப் புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே;
நிற்பீர் எல்லாம், தாழாதே, நிற்கும் பரிசே, ஒருப்படுமின்;
பிற்பால் நின்று, பேழ்கணித்தால், பெறுதற்கு அரியன், பெருமானே.

[7]
பெருமான் பேர் ஆனந்தத்துப் பிரியாது இருக்கப் பெற்றீர்காள்,
அரு மால் உற்றுப் பின்னை நீர், அம்மா! அழுங்கி அரற்றாதே,
திரு மா மணி சேர் திருக் கதவம் திறந்தபோதே, சிவபுரத்து,
திருமால் அறியாத் திருப் புயங்கன் திருத் தாள் சென்று சேர்வோமே.

[8]
சேரக் கருதி, சிந்தனையைத் திருந்த வைத்து, சிந்திமின்;
போரில் பொலியும் வேல் கண்ணாள் பங்கன், புயங்கன், அருள் அமுதம்
ஆரப் பருகி, ஆராத ஆர்வம் கூர அழுந்துவீர்!
போரப் புரிமின் சிவன் கழற்கே, பொய்யில் கிடந்து புரளாதே.

[9]
புரள்வார், தொழுவார், புகழ்வார், ஆய்; இன்றே வந்து, ஆள் ஆகாதீர்,
மருள்வீர்; பின்னை, மதிப்பார் ஆர்? மதியுள் கலங்கி, மயங்குவீர்;
தெருள்வீர் ஆகில், இது செய்மின்; சிவலோகக் கோன், திருப்புயங்கன்
அருள் ஆர் பெறுவார், அகல் இடத்தே? அந்தோ! அந்தோ! அந்தோவே!

[10]

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.150   ஆனந்தமாலை - மின்னே ரனைய  
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே   (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அறுசீர் விருத்தம்
மின் நேர் அனைய பூம் கழல்கள் அடைந்தார் கடந்தார், வியன் உலகம்;
பொன் நேர் அனைய மலர் கொண்டு போற்றா நின்றார், அமரர் எல்லாம்;
கல் நேர் அனைய மனக் கடையாய், கழிப்புண்டு, அவலக் கடல் வீழ்ந்த
என் நேர் அனையேன், இனி, உன்னைக் கூடும்வண்ணம் இயம்பாயே.

[1]
என்னால் அறியாப் பதம் தந்தாய்; யான் அது அறியாதே கெட்டேன்;
உன்னால் ஒன்றும் குறைவு இல்லை; உடையாய், அடிமைக்கு யார்? என்பேன்:
பல் நாள் உன்னைப் பணிந்து ஏத்தும் பழைய அடியரொடும் கூடாது,
என் நாயகமே! பிற்பட்டு, இங்கு, இருந்தேன் நோய்க்கு விருந்தாயே.

[2]
சீலம் இன்றி, நோன்பு இன்றி, செறிவே இன்றி, அறிவு இன்றி,
தோலின் பாவைக் கூத்தாட்டு ஆய், சுழன்று, விழுந்து, கிடப்பேனை
மாலும் காட்டி, வழி காட்டி, வாரா உலக நெறி ஏற,
கோலம் காட்டி, ஆண்டானை, கொடியேன் என்றோ கூடுவதே?

[3]
கெடுவேன்; கெடுமா கெடுகின்றேன்; கேடு இலாதாய், பழி கொண்டாய்;
படுவேன், படுவது எல்லாம், நான் பட்டால், பின்னைப் பயன் என்னே?
கொடு மா நரகத்து அழுந்தாமே காத்து ஆட்கொள்ளும் குருமணியே,
நடு ஆய் நில்லாது ஒழிந்தக்கால், நன்றோ, எங்கள் நாயகமே?

[4]
தாய் ஆய் முலையைத் தருவானே, தாராது ஒழிந்தால், சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ? நம்பி, இனித்தான் நல்குதியே;
தாயே என்று உன் தாள் அடைந்தேன்; தயா, நீ, என்பால் இல்லையே?
நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய்; நான் தான் வேண்டாவோ?

[5]
கோவே, அருள வேண்டாவோ? கொடியேன் கெடவே அமையுமே?
ஆ! ஆ!' என்னாவிடில், என்னை அஞ்சேல்' என்பார் ஆரோ தான்?
சாவார் எல்லாம் என் அளவோ? தக்க ஆறு அன்று' என்னாரோ?
தேவே! தில்லை நடம் ஆடீ! திகைத்தேன்; இனித்தான் தேற்றாயே!

[6]
நரியைக் குதிரைப் பரி ஆக்கி, ஞாலம் எல்லாம் நிகழ்வித்து,
பெரிய தென்னன் மதுரை எல்லாம் பிச்சு அது ஏற்றும் பெருந்துறையாய்!
அரிய பொருளே! அவிநாசி அப்பா! பாண்டி வெள்ளமே!
தெரிய அரிய பரஞ்சோதீ! செய்வது ஒன்றும் அறியேனே!
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

[7]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list